×

ஜன.1 முதல் சலூன்களில் கட்டணம் உயர்வு முடி திருத்துவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி டிச. 9: ஜனவரி 1 முதல் சலூன்களில் கட்டணத்தை உயர்த்துவது என மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம், சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் டென்சிங் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல், மருத்துவ சங்க எதிர்கால செயல்பாடு பற்றி பேசினார். மாவட்ட செயலாளர் நாகராஜ் தீர்மானங்களை விளக்கினார். கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் முடி திருத்துவோர் அன்றாட செலவுகளை ஈடுகட்டும் வகையில் வரும் 2024 ஜனவரி 1 முதல் கட்டிங், ஷேவிங் உள்ளிட்ட வேலைகளுக்கு கட்டணத்தை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சாதாரண சலூன் மற்றும் ஏசி சலூன்களில் முறையே பெரியவர்களுக்கு ஹேர் கட்டிங் மட்டும் ₹130, ₹150, மாடல் கட்டிங் ₹200, ₹250, ஷேவிங் மட்டும் ₹80, ₹100, கட்டிங் மற்றும் சேவிங் சேர்த்து ₹200, ₹220, 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஹேர் கட்டிங் ₹100, ₹120 என்று கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. டிச.31ம் தேதி தியாகி விஸ்வநாததாஸ் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்திட மருத்துவ கண்காணிப்பு முகாம்களை நடத்திட வேண்டும், சங்க உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ஜன.1 முதல் சலூன்களில் கட்டணம் உயர்வு முடி திருத்துவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Hairdressers Association ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...